உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்திற்கு வைகை அணை நீரை திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய், நாரை தொடர்ச்சியாக பறக்க முடியாத 48 குருச்சிகளை (கிராமங்கள்) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்மாய் பருவமழைக் காலங்களில் மழை நீரால் மட்டுமே நிரம்புவது சாத்தியமற்றது.இந்நிலையில் பருவமழை துவங்கி பல வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் போதிய மழைப்பொழிவு இன்றி பெரிய கண்மாயில் ஒரு அடிக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. கண்மாயில் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ள நெல் விவசாயத்தை விவசாயிகள் காப்பாற்றுவது கேள்விக்குறியாக உள்ளது.பருவமழை ஏமாற்றுவதால் பெரிய கண்மாய் உட்பட பெரிய கண்மாயின் கீழ் உள்ள 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களும், போதிய தண்ணீரின்றி உள்ளன. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முழுமையாக பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம், பாசன விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வைகை அணையில் இருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து 72 கண்மாய் பாசன விவசாய சங்க தலைவர் சோழந்துார் பாலகிருஷ்ணன் கூறுகையில், போதிய மழைப்பொழிவு இல்லாததால் பெரிய கண்மாயில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. மேலும் பெரிய கண்மாயின் கீழ் உள்ள சிறிய கண்மாய்களிலும் போதிய தண்ணீர் இல்லை.எனவே வைகை அணையிலிருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி