சேதமடைந்த ஜெட்டி பாலத்தில் சிக்கிய மணல் அள்ளும் இயந்திரம்
தொண்டி : தொண்டி அருகே சோலியக்குடியில் சேதமடைந்த ஜெட்டி பாலத்தில் சென்ற மணல் அள்ளும் இயந்திரம் சிக்கியது. தொண்டி அருகே சோலியக்குடியில் 100க்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஜெட்டி பாலம் உள்ளது. அந்த பாலத்தில் மீன்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைக்கவும் மீனவர்கள் பயன்படுத்தினர்.பாலம் சேதமடைந்து விட்டதால் மீனவர்கள் விசைப்படகுகளை நிறுத்தி மீன்களை இறக்கி வைக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இப்பாலத்தை சீரமைக்கக் கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பாலத்தை சீரமைக்கவில்லை. இரவில் மீனவர்கள் பாலத்தின் மீது நடந்து செல்லும் போது அச்சமடைந்தனர்.இது குறித்து தொண்டி வக்கீல் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் பாலம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. நடந்து செல்பவர்கள் பாலத்தில் உள்ள ஓட்டை வழியாக விழுந்து காயமடைகின்றனர். பாலத்தை சீரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நேற்று விசைபடகு இன்ஜினை ஏற்றிக் கொண்டு மணல் அள்ளும் இயந்திரம் ஜெட்டி பாலத்தில் சென்ற போது ஓட்டையில் சிக்கியது. நீண்ட நேரத்திற்கு பிறகு டிராக்டர் மூலம் மீட்கப்பட்டது. இச் சம்பவத்தால் பாலம் மேலும் சேதமடைந்தது.