மோர்ப்பண்ணையில் சப்த கன்னிகள் பொங்கல்; கடல் அன்னைக்கு படையலிட்ட மீனவர்கள்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் சப்த கன்னிகள் மூலம் பொங்கல் வைத்து கடல் அன்னைக்கு படையலிட்டு மீனவர்கள் வழிபட்டனர். ராமநாதபுரம்மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையில் ஆண்டு தோறும் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தை முதல் நாளில் ரண பத்ரகாளியம்மன் கோயில் முன் சப்த கன்னிகள் மூலம் பொங்கல் வைத்து சிறிய படகில் சென்று பொங்கல் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். இதையடுத்து சில வாரங்களுக்கு முன் ஊர் கூட்டம் நடத்தப்பட்டு சப்த கன்னிகளாக ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பொங்கல் வைக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நேற்று ரண பத்திரகாளியம்மன் கோயில் முன் ஏழு சிறுமிகளும் தனித்தனி பானைகளில் பொங்கல் வைத்தனர். அதன் பின் கிராமத்தினர் சார்பில் செய்யப்பட்ட சிறிய படகில் சிறுமிகள் வைத்த பொங்கல் மற்றும் பூஜை பொருள்களை வைத்து அதில் விளக்கு ஏற்றப்பட்டது. பின் சிறுமிகள் 7 பேருக்கும் கிராமத்தின் சார்பில் மாலையணிவித்து சிறுமிகள் கரகம் எடுத்து ஊர்வலமாக கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடல் நீரில் குறிப்பிட்ட தொலைவு சென்ற பின் படையல் இடப்பட்டு தீபம் ஏற்றிய சிறிய படகு, கடல் நீரில் விடப்பட்டு சப்த கன்னிகள் முன்னிலையில் தங்களது வாழ்வாதாரமான கடல் அன்னையை கிராமத்தினர் வழிபட்டனர்.