சாத்தையனார் கோயில் எருதுகட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் எருது கட்டு விழா ஏப்.,30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. விழாவின் ஆறாம் நாளில் வடம் எடுத்தல் நிகழ்வும், அதைத் தொடர்ந்து மறுநாள் தங்குவட நிகழ்வும் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளான நேற்று எருதுகட்டு விழா நடந்தது. சுற்றுப்புற பகுதி கிராம விவசாயிகள், தங்களது காளைகளின் கழுத்தில் வடத்தை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று அய்யனார் கோயில் முன்பு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.