மினி பார் ஆன சாயல்குடி -- தரைக்குடி ரோடு போதை ஆசாமிகளால் அச்சத்தில் மக்கள்
சாயல்குடி : சாயல்குடி -- தரைக்குடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. சாலையின் இரு புறங்களிலும் வயல்வெளிகள், பனை மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் மது அருந்தும் போதை ஆசாமிகளால் மாணவிகள், பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாயல்குடியில் இருந்து தரைக்குடி சாலையில் உள்ள மதுபான கடையில் பாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிமகன்கள் பனைமரக்காடுகளிலும் சாலையோர சிறு பாலங்களிலும் நீர்நிலை அதிகம் உள்ள இடங்களிலும் மொத்தமாக அமர்ந்து கொண்டு உ.பா., அருந்துகின்றனர். இந்நிலையில் சாலை ஓரமாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாலை வேளைகளில் டியூசன் முடிந்து செல்லக்கூடிய மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குடித்து முடித்த பாட்டில்களை திறந்த வெளியில் உடைத்துச் செல்வதால் மற்றும் வயல்வெளிகளில் போட்டு செல்வதால் விவசாய காலங்களில் அவை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கால்களை குத்தி பதம் பார்க்கின்றன. எனவே சாயல்குடி போலீசார் பொதுமக் களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலை ஓரங்களில் அமர்ந்து குடிக்கும் குடிமகன்களிடம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.