அரிய வகை உயிரினங்களின் புகலிடமாக சாயல்குடி வனச்சரக காப்புக் காடுகள் மண்ணுக்கேற்ற மரங்கள் தேவை
சாயல்குடி: சாயல்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டு பகுதியில் அரிய வகை உயிரினங்களின் புகலிடமாக திகழ்கிறது.சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டி உள்ள கடலோர கிராமங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் இவ்வகையான உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களாக திகழ்கின்றன. சாயல்குடி அருகே மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார் காப்புக்காடுகள், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், வாலிநோக்கம் முதல் மாரியூர், முந்தல், ஒப்பிலான், கடுகுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேரில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன.இவற்றில் மிகுதியான அளவு சீமைக் கருவேல மரங்களின் தாக்கம் உள்ளது. புள்ளிமான், முயல், காட்டுப்பன்றி, புனுகு பூனை, மரநாய், உடும்பு, விஷப்பாம்புகள், ஸ்டார் ஆமை, மண்ணுளிப் பாம்பு உள்ளிட்டவைகள் இப்பகுதிகளில் அதிகம் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேர்வு செய்து வன உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றன. சாயல்குடி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில் மிகுதியான அளவு அரிய வகை உயிரினங்கள் உள்ளன.மண்ணுக்கேற்ற மரங்களை நடவு செய்வது. தற்போதைய காலகட்டங்களில் அவசிய தேவையாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களே தற்போது மிகுதியான அளவு அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. கடலில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதைப் போல நிலத்திலும் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இவற்றை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழும் அரிய வகை உயிரினங்களை பாதுகாப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி அரியவகை உயிரினங்களை வேட்டையாடுவது தெரிய வந்தால் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்த போதிய விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றனர்.