பயமுறுத்தும் தரைப்பாலம்
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் உட்பட திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வைகை ஆற்றில் ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்தப் பாலம் பரமக்குடி தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி ரோடு இணையும் இடத்தில் இருக்கிறது. மறு கரையான எமனேஸ்வரம் பகுதியில் இளையான்குடி ரோட்டை இணைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் அமைக்கும் போது அருகில்தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்து பலரது உயிரை பறித்துள்ளது. தற்போது ஐந்து ஆண்டுகளாக பாலம் எந்த பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் பாலத்தில் செல்வோருக்கு ஒவ்வொரு முறையும் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாமல் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வைகை நீரும் ஒரே பகுதியில் செல்ல நேர்வதால் அருகில் உள்ள மேம்பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே தற்காலிக தரைப்பாலம் பகுதியை ஒட்டுமொத்தமாக சீரமைக்காத நிலையில் இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நீர் வள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வைகை ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதுடன் விபத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.