வணிக பயன்பாடு மின் கட்டணம் வசூல் உதவிபெறும் பள்ளிகள் பாதிப்பு
ராமநாதபுரம்: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் வசூலிப்பதால் பாதிக்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படும் அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மின்சாரத்திற்கு வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அரசு சார்பில் நடத்தப்படும் தேர்தல் பணிகள், போட்டித் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என அனைத்திற்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான மின் கட்டணத்தையும் செலுத்தும் போது அதிக தொகை செலவிட வேண்டியது உள்ளது. எனவே இப்பள்ளிகளின் நலன்கருதி வணிக பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணத்திற்கு புதிய வழிமுறை வகுக்க வேண்டும் என நிர்வாகத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.