ராமேஸ்வரம் அப்துல்கலாம் கல்லுாரியில் சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பு கேள்விக்குறி
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கல்லுாரியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஜூன் முதல் ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் அருகில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலை அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் அமைத்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்லுாரியை சுற்றிலும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் பொதுப்பணி துறையினர் சுற்றுச்சுவர் கட்ட முடியாமல் திணறுகின்றனர். இதனால் கல்லுாரி கட்டடம் மற்றும் வளாகத்திற்குள் பகல், இரவில் ஆடு, மாடுகள் வருவதும், இரவில் குடிமகன்கள் மது அருந்தி பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். மேலும் சமூக விரோதிகள் விரும்பத் தகாத செயலில் ஈடுபடுவதாக புகார் எழுகிறது. இதனால் மாணவர்கள், கல்லுாரி பொருள்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி சுற்றுச்சுவர் கட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.