இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்திய 270 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகளை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் மருத்துவ பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடல் அட்டைகளைப் பிடித்து கடத்தல்காரர்களிடம் விற்கின்றனர். அவற்றை மறைவான இடத்தில் பதப்படுத்தி கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் சென்று விற்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரம் அருகே அரியாங்குண்டு பகுதியில் சிறப்பு வனத்துறை படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அடர்ந்த காட்டுப்பகுதியில் சீமைக்கருவேல மரங்களுக்குள் பதப்படுத்தி சாக்கு மூடைகளில் வைத்திருந்த 270 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். வனத்துறை காவலர்களை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். கடத்தல்காரர்களை மண்டபம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.