மாயமான வாலிபரின் உடல் குளத்தில் மிதந்ததால் அதிர்ச்சி
திருவாடானை: வீட்டிலிருந்து மாயமான வாலிபர் உடல் குளத்திற்குள் கிடந்ததால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருவாடானை அருகே பாண்டுகுடியை சேர்ந்தவர் வேலுமணி 32. லாரி டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி திவ்யா 28. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்ந்தனர். ஜன.14 இரவு வேலுமணி மாயமானார். அவரது தாய் காமாட்சி புகாரில் தொண்டி போலீசார் வேலுமணியை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை பாண்டுகுடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள குளத்தில் உள்ள நீரில் மூழ்கிய நிலையில் வேலுமணி இறந்து கிடந்தார். உடல் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது வேலுமணியின் உறவினர்கள் வேலுமணியை சிலர் கொலை செய்து குளத்தில் துாக்கி வீசியுள்ளனர். ஆகவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்தனர். தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடலை வாங்கினர். வேலுமணி மாயமான வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.