உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட  தடகளபோட்டி:  பெயரளவில் ஏற்பாடு

பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட  தடகளபோட்டி:  பெயரளவில் ஏற்பாடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான மண்டபம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் பெயரளவில் நடந்தது. போதிய குடிநீர், மருத்துவ வசதியின்றி மாணவர்கள் சிரமப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டபம் குறுவட்ட அளவிலான போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக குழு விளையாட்டுகள், தடகளப்போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. நேற்று மாணவர்களுக்கு தடகளப்போட்டி 14, 17 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடந்தது. மண்டபம் வட்டார பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். பெயரளவில் ஏற்பாடு குறுவட்டார அளவிலான போட்டியை ஆரம்பத்தில் துவக்கி வைத்த பிறகு அதனை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நேற்றைய போட்டியின் போது போதிய குடிநீர், மருத்துவ வசதியின்றி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். நீளம் தாண்டுதலின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மாணவர் வலியால் சிரமப்பட்டார். அவ்விடத்தில் மருந்து இல்லாததால் வெறும் தண்ணீர் கொடுத்து அழைத்து சென்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களிடம் கேட்ட போது முதலுதவிக்கான மருத்துவ உபகரணங்கள் உள்ளே வைத்துள்ளோம் என கூலாக பதிலளித்தனர். இனிவரும் நாட்களில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக மருத்துவ உபகரணங்கள் போட்டிகள் நடைபெறும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். அதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை