| ADDED : டிச 04, 2025 05:37 AM
திருவாடானை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தி.மு.க., வினர் தலையீடு இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் தேதி டிச.,11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. குடியிருப்பில் இல்லாத, இறப்பு, நிரந்தர குடி பெயர்ந்தோர், இரட்டை பதிவு விவரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது. சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து திருவாடானை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரெத்தினமூர்த்தி கூறியதாவது: டிச.,28 வரை பணிகள் நன்றாக நடந்தது. அதன் பிறகு வெளி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களை பி.எல்.ஓ.,க் களிடம் கூறி சேர்க்கும் முயற்சியில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக வாக்காளர்களை முறை கேடாக சேர்க்கும் முயற்சியில் தி.மு.க., வினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து எங்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் புதிய வாக்காளர்களை சேர்க்க கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.