பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி: வேப்ப மரத்தடியில் சோகம்
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வாழவந்தாள்புரத்தில் வேப்ப மரத்தடியில் மின்னல் தாக்கியதில் அக்கா, தங்கை பலியாயினர். பரமக்குடி அருகே சத்திரக்குடி அடுத்த வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்தவர் நுாருல் அமீன். இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மூத்த மகள் செய்யது அஸ்பியா பானு 13, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். மற்றொரு மகள் சபிக்கா பானு 9, அரியகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் மதியம் வீட்டருகில் உள்ள வேப்ப மரத்தடியில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றனர். தொடர்ந்து 3:00 மணிக்கு சாரல் மழை பெய்த நிலையில் இடியுடன் மின்னல் அதிகமானது. அப்போது மின்னல் தாக்கியதில் இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்தில் பலியாயினர்.சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.