பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு அக்.14,15ல் பேச்சு, கட்டுரை போட்டி
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்அக்.,14ல் பள்ளி மாணவர்களுக்கும், அக்.,15ல் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அக்.,14ல், கல்லுாரி மாணவர்களுக்கு அக்.,15ல் ராமநாதபுரம் தனியார் கல்வியியல் கல்லுாரியில் காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதற்கான படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர், முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லுாரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர் களுக்கு அறிவிக்கப் படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 என பரிசு காசோலையாக வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.