உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அருகே இலங்கை அகதிகள் தவிப்பு

ராமேஸ்வரம் அருகே இலங்கை அகதிகள் தவிப்பு

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் அடிப்படை வசதிகளின்றி இலங்கை அகதிகள் தவித்து வருகின்றனர்.இலங்கையில் ராணுவம்- விடுதலைப்புலிகள் இடையே 1984 முதல் 2009 வரை தீவிரமாக போர் நடந்தது. இதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் வீடுகள், உடமைகளை இழந்து அகதிகளாக படகுகளில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வந்தனர். 2009ல் நடந்த இறுதிக்கட்ட போர் நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.இவர்கள் முதலாவதாக மண்டபம் முகாமில் பதிவு செய்யப்படுவர். பிறகு மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, சென்னை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 125 முகாம்களில் தங்க வைக்கப்படுவர். மண்டபம் முகாமில் 1400 பேர் உட்பட தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஒரு லட்சம் அகதிகள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசு நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் மாதந்தோறும் ஒருவருக்கு தலா ரூ.700 முதல் 1500 வரை வழங்குகிறது.இந்த நிவாரணம் போதுமானதாக இல்லாததால் 90 சதவீதம் அகதிகள் வெளியில் கூலி வேலைக்கு செல்கின்றனர். இச்சூழலில் மண்டபம் முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு வீடுகள், கழிப்பறைகள் போதியதாக இல்லை. இங்கு பல வீடுகள் சேதமடைந்தும் மழை நீர் ஒழுகும் அவலம் உள்ளது.சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் அந்த அறிவிப்பை கிடப்பில் போட்டதால் திட்டம் கானல் நீராகி போனதோ என அகதிகள் ஏக்கத்தில் உள்ளனர். மழைகாலத்தில் பல வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அகதிகள் அச்ச உணர்வில் உள்ளனர்.மண்டபம் முகாமில் உள்ள வீடுகளை புதுப்பித்து தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகதிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை