பள்ளியை விட்டு தப்பிச் செல்லும் மாணவர்கள்: மன அழுத்தம் காரணமா
திருவாடானை: மன அழுத்தம் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் தப்பி செல்வது தொடர்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுவன். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். திருவாடானை போலீசார் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் மாரியம்மன் கோயிலில் மாணவர் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருவாடானை போலீசார் சென்று மீட்டனர். சில மாதங்களுக்கு முன்பு சின்னக்கீரமங்கலம் 12 வயது மாணவன் பள்ளிக்கு நடந்து சென்ற போது காரில் வந்த நான்கு பேர் தன்னை கடத்திச் சென்றதாகவும் திருவாடானையில் இறக்கி விட்டதாவும், அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தான்.போலீசார் விசாரணையில் கடத்திச் சென்றதற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சமீப காலமாக மாணவர்கள் அடிக்கடி மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பள்ளியில் நடக்கும் சில சம்பவங்களால் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக பள்ளியிலிருந்து தப்பியிருக்கலாம். பள்ளியில் இருந்து தப்பி ஓடும் மாணவர்கள் தங்களுக்கு ஆபத்து இருக்கும் இடங்களுக்கு செல்லலாம்.எனவே அவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை அடையாளம் கண்டு அவர்களின் நிலையை புரிந்து கொண்டு உதவி செய்யவேண்டும் என்றனர்.