மாத்திரை கவர் ஸ்பான்சர் தினமலர் செய்தி எதிரொலி
திருவாடானை:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சிலர் மாத்திரை கவர் ஸ்பான்சர் செய்தனர்.திருவாடானையில் அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். திருவாடானை மட்டுமின்றி சின்னக்கீரமங்கலம், ஓரிக்கோட்டை, நெய்வயல், டி.நாகனி, அஞ்சுகோட்டை, தினையத்துார், தோட்டாமங்கலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ஊழியர்கள் எந்தெந்த மாத்திரைகள் எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று காகித கவர் இல்லாமல் கையில் மாத்திரைகளை கொடுத்து தெரிவிக்கின்றனர்.வீட்டிற்கு செல்லும் நோயாளிகள் எந்த மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். வயதான நோயாளிகள்கூறுகையில், மருந்துகளை கையில் வாங்கி வெளியே செல்வதற்குள் மறந்து விடுகிறது. மாற்றி சாப்பிட்டு விடுவதால் நோய் குறைய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது என்றனர். இதுகுறித்து செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இந்த செய்தியை பார்த்த சிலர் மருத்துவமனை மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மாத்திரை கவர்களை ஸ்பான்சர் செய்தனர்.