டேங்கர் மற்றும் டிராக்டர் தண்ணீரை குளோரினேஷன் செய்ய வேண்டும் ஹோட்டல்களில் சுகாதாரமான குடிநீர் தேவை
கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் பகுதிகளில் காவிரி குடிநீருக்கு அடுத்தபடியாக அதிகளவில்டேங்கர் லாரி, டிராக்டர்களில் கொண்டு வரும் தண்ணீரை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.உச்சிப்புளி அருகே இருமேனி, சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகளின் மூலமாகவும் தண்ணீர் விலைக்கு வாங்கி அவற்றை கிராமங்கள் மற்றும் தெருக்களில் குடிநீரை குடம் ரூ. 6 முதல் 8க்கு விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கிணறுகளில் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் அவற்றை மொத்தமாக மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சி டேங்கர்களில் ஏற்றும் போது டேங்கர்களை முறையாக பராமரிக்காமல் அவற்றில் பாசி படிந்தும், துருப்பிடித்தும் உள்ளது. எனவே குளோரினேஷன்செய்யப்பட வேண்டும். இவற்றை முறையாக கண்காணிக்காவிட்டால் கொசுப் புழுக்கள், லார்வா உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் துாய்மையாக உள்ளதா என்பதை உணவு கலப்படம் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும். இவர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையினரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கொசுக்கள் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சியுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலுடன், துாய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.