பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மாணவர்களின் கற்கும் திறன் பாதிப்பு
திருவாடானை : எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்கபள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கபடும் நிலை உள்ளது. தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் அரசு தொடக்கபள்ளி உள்ளது. 110 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மூன்று ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கபடுகிறது. இது குறித்து எஸ்.பி.பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது- இப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கபடுகிறது. ஆக.15 அன்று சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தேசியகீதம் பாடினர். அப்போது பாடலை தவறாக பாடினர். முழுமையான உச்சரிப்பும் இல்லை. அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ள கற்றல், கற்பித்தல், வாசிப்பு பழக்கம் போன்ற பயிற்சிகளை வழங்க கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கபட்டுள்ளது. ஆனால் மாணவர்களிடம் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளது. திருவாடானை வட்டாரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்நிலைமை உள்ளது. மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி வழங்கபடுவது பெயரளவில் செயல்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் கற்றல் திறன் குறைபாடுகளை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வரும் குடியரசு தின விழாவிலாவது மாணவர்கள் தேசிய கீதத்தை முறையாக பாடும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றனர்.