சாயல்குடி அருகே பஸ் வசதி இல்லாத பத்து கிராமங்கள் வாடகை வாகனங்களில் பயணம்
சாயல்குடி: சாயல்குடி அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் வாடகை வாகனங்களில் அதிக பணம் கொடுத்தும் செல்லும் அவல நிலை உள்ளது.சாயல்குடி அருகே காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டைக்கு நுாறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 8 கி.மீ., தனியார் வாடகை வாகனங்களில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு சரியில்லாத நிலையில் அதன் பிறகு கிராம சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி இப்பகுதி வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்குவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பா.ஜ., மாநில விவசாய அணி முருகவேல் கூறியதாவது: கமுதி பஸ் டிப்போவில் இருந்து சாயல்குடி வழியாக வரக்கூடிய டவுன் பஸ் கோவிலாங்குளம், கொம்பூதி, காத்தனேந்தல், கும்மியாங்குளம், ஓச்சத்தேவன் கோட்டை, பறையங்குளம், எம்.கரிசல்குளம் மற்றும் கூராங்கோட்டை வழியாக மீண்டும் சாயல்குடி வருவதற்கான வழித்தடம் உள்ளது.இதன் மூலம் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வாக்குறுதியாக இப்பகுதியில் பஸ் வசதி செய்து தரப்படும் என அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் இல்லை. பஸ் வசதி வேண்டி கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளேன். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி கமுதியில் இருந்து வரக்கூடிய பஸ்சை கிராமங்களின் வழியாக சுற்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.