ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் கூடாரங்கள் சேதம்: சீரமைக்கப்படுமா
ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட குடிசை கூடாரங்கள் சேதமடைந்து சரிந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ.,ல் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் அரியமான் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு 2 கி.மீ., நீளத்தில் 150 மீட்டர் அகலத்தில் மணல்பாங்கான கடற்கரை, ஓசையில்லாத நீலக்கடலும், மின்னும் வெண்மையான மணலும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கரையோர சவுக்கு மரங்களால் குளிர்ந்த காற்று வீசுகிறது. அலை இல்லாததால் குழந்தைகளுடன் மக்கள் பொழுது போக்க வருகின்றனர். ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல வசதியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் அரியமான் கடலில் சொகுசு படகு சவாரி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி இயக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களில் ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வந்து செல்கின்றனர். அவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் குடிசை கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது பலத்த காற்றில் அவை சேதமடைந்து கீழே சரிந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.