கடலாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சீரமைக்கப்படாத நிலையில் தரை தளம்
கடலாடி : கடலாடியில் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தளம் மழையால் சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்படாமல் உள்ளது.கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார 22 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் பத்திரம் பதியவும், ரியல் எஸ்டேட் நிலங்களை வாங்க மற்றும் விற்பனை செய்வதற்காகவும் வேலை நேரங்களில் வருகின்றனர். கடலாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு பேவர் பிளாக் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் நீரில் மூழ்கியது. இதனால் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்தது. இரண்டு ஆண்டுகளாக மீண்டும் பதிக்காமல் ஓரிடத்தில் குவித்து வைத்துள்ளனர். தற்போது அவ்விடத்தில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியிடமாக மாறி வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக பத்திரப்பதிவு அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மழை நீர் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு வழி ஏற்படுத்துகிறது. சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆண்டுக் கணக்கில் மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். அரசுக்கான வருவாயை மட்டும் எதிர்பார்க்காமல் உரிய முறையில் சீரமைப்பு பணிகளை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும்.