கல்வெட்டே தரமில்லை... பணி எப்படி முறையாக பணி செய்தால் மக்கள் மனதில் நிற்கலாம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, மண்டபம், கடலாடி, கமுதி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கட்டப்பட்டுள்ள பணிகள் தொடர்பான விபர கல்வெட்டுகள் தரமற்றதாக இருப்பதால் மழைக்கு கூட தாங்காமல் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.கிராம ஊராட்சிகளில் தடுப்பணைகள், குடிமராமத்து பணிகள், மேல்நிலைத் தொட்டி அமைத்தல், உறிஞ்சி குழிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக அதன் மதிப்பீட்டுத் தொகையுடன் அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் தரமற்றிருப்பதால் கீழே விழுகின்றன.தன்னார்வலர்கள் கூறியதாவது: பெரும்பாலான ஊராட்சிகளில் தடுப்பணைகள், கான்கிரீட் சாலைகள் விரைவிலேயே சேதமடைகிறது. அரசு நிதி வீணடிப்பு செய்யப்படுகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வழியில்லாத நிலை உள்ளது. கால்நடைகள் குடிப்பதற்கான நீர் தொட்டிகள் பல இடங்களில் உடைந்து விரிசலுடன் உள்ளதால் தண்ணீரை சேமிக்க வழி இல்லை. மக்கும் குப்பை, மக்கா குப்பை மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளது.மூன்று முதல் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்படக்கூடிய திட்ட மதிப்பீடுகளை தாங்கும் கல்வெட்டுகள் தரமற்றிருப்பதால் அவை பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீது விழும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செய்யக்கூடிய பணிகளை தரமாக செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முன் வர வேண்டும் என்றனர்.