அடிப்படை வசதிகளின்றி பட்டணம்காத்தான் வடக்கு பகுதி, கடம்பாநகர் மக்கள் கடும் அவதி; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி வடக்கு பகுதி 2வது தெரு மற்றும் கடம்பா நகரில் அடிப்படை வசதிகளே இல்லை. குண்டும் குழியுமான ரோடு, குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர், மழை நீரால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர். பட்டணம்காத்தான் வடக்கு பகுதி மற்றும் கடம் பாநகர் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தார் ரோடுகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகவும், மண் ரோடாகவும் மாறியுள்ளது. மழை பெய்தால் குளம் போல தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகி நடப்பதற்கே லாயக்கற்ற ரோடாக உள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் அதிகாரிகளிடம் 8 முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூறியதாவது: எஸ்.ஆறுமுகம், ஜெ.விவேகானந்தன்: 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. பள்ளி மாணவர்கள், முதியவர்கள் நடந்து செல்லும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர். டூவீலர்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். புதிதாக ரோடு அமைக்க வேண்டும். கே.முத்துராமன், ஐ.மலைச்சாமி: மகாத்மாகாந்தி நகர் கடம்பா நகரில் மழை பெய்தால் குளம் போல தண்ணீர் தேங்குகிறது. சாக்கடை வசதியின்றி கழிவுநீர் வீட்டு வளாகத்திற்குள் தேங்கி சுகாதாரக்கேட்டால் சிரமப்படுகிறோம். பள்ளத்தை மூடுவதற்கு தற்காலிமாக கல்லை போட்டு வைத்துள்ளோம். அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை. தெரு விளக்குகள் பெயரளவில் எரிகின்றன. செப்டிக் டேங்க் கழிவுநீரை எடுக்கவே ஆண்டுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே பாதாள சாக்கடை வசதி மற்றும் புதிதாக தார் ரோடு அமைத்து தர வேண்டும். ஏ.கவிபாரதி, கே. உதயராணி, எஸ். சவுமியா: எங்கள் பகுதியில் 1000 த்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. தனியாக ரேஷன் கடை இல்லாததால் டி-பிளாக் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமப்படுகிறோம். காவிரி குடிநீர் வருவது இல்லை. குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். குப்பையை சரிவர எடுப்பது இல்லை. தெரு நாய்களால் இரவில் வெளியே நடந்து செல்ல பெண்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் வசதி மற்றும் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். ஓட்டு கேட்க வரும் போது மட்டும் அதை செய்வோம், இதை செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி விட்டனர். அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லை. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.,வை ஓட்டு கேட்க வந்த போது பார்த்தது. அதன் பிறகு பார்க்க முடியவில்லை. கலெக்டர் அலுவலகம் அருகே குடியிருந்தும் அதிகாரிகள் எங்களது பிரச்னையை கண்டு கொள்ளவே இல்லை. அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்டவை உடனடியாக செய்துதர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.