நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்
ராமநாதபுரம்: நெல் அறுவடை பணியில் ஈடுபடும் இயந்திரங்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.29 லட்சம் எக்டேரில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த நெல் அனைத்தும் விளைச்சல் கண்டு அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதனால் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக வாடகை விவசாயிகளிடம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது வாடகை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் சங்கம், வேளாண் பொறியியல் துறை, விவசாயிகள் இணைந்து கூட்டத்தை நடத்தி அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.மற்ற மாவட்டங்களில் அறுவடை இயந்திரம் டயர் வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 என நிர்ணயம் செய்துள்ளனர். அதற்கு மேல் வாடடை வசூலிக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.