காட்சிப்பொருளான சிக்னல் கம்பம்: கேணிக்கரை சந்திப்பில் நெரிசல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை நான்கு ரோடு சந்திப்பில் சிக்னல் செயல்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை ஒழுங்குபடுத்த மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட்-, மருத்துவமனை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, கேணிக்கரை ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 'சிக்னல்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த ராமநாதபுரம் கேணிக்கரை நான்கு ரோடு சந்திப்பில் சிக்னல் விளக்குகள் பயன்பாடில்லாமல் பழுதாகியுள்ளன. இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கேணிக்கரை உட்பட நகர், புறநகர் பகுதியில் செயல்படாமல் உள்ள 'சிக்னல்'களை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.