ராமநாதபுரத்தில் அரசு அறுவடை இயந்திரம் இல்லை: விவசாயிகள் தவிப்பு*
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி ஆண்டுதோறும் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு 12 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது.விளைந்த நெற்பயிர்கள் அறுவடை பணி ஜன., முதல் வாரம் துவங்கியது. போதிய கூலி ஆட்கள் கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் இல்லை. மாறாக ஆண்டு தோறும் வெளி மாவட்டங்களில் இருந்து அரசு அறுவடை இயந்திரங்கள் வருகின்றன.இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கவாஸ்கர், ராஜா கூறுகையில், மாவட்டத்தில் சொந்த அறுவடை இயந்திரம் இல்லாததால் ஆண்டு தோறும் அறுவடை பணிக்கு வெளியூர் நெல் அறுவடை இயந்திரங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது.வேளாண் துறை சார்பில் 3 வாகனங்கள் மட்டுமே உள்ளன. அரசு வாகனத்தை விட மணிக்கு ரூ.1000 வரை தனியார் கூடுதலாக வாடகை கேட்கின்றனர்.பெல்ட் இயந்திரம் ரூ.3000, (அரசு இயந்திரம் ரூ.1800) வாங்குகின்றனர். எனவே தனியார் அறுவடை இயந்திரத்திற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதலாக வெளியூர்களில் இருந்து அரசு வாகனங்கள் கொண்டு வர வேண்டும். தனியார் இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.