உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / படிப்பதற்கு இட வசதி இல்லை.. : படிக்கட்டுகளில் உறங்கும் புத்தகங்கள்: 1050 சதுர அடியில் நுாலகம்

படிப்பதற்கு இட வசதி இல்லை.. : படிக்கட்டுகளில் உறங்கும் புத்தகங்கள்: 1050 சதுர அடியில் நுாலகம்

பரமக்குடி: பரமக்குடியில் புதிதாக ரூ.70 லட்சத்தில் திறக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட அரசு நுாலக கட்டடம் 1050 சதுர அடியில் குறுகிய இடத்தில் உள்ளதால் படிக்க இட வசதியின்றி புத்தகங்களை அடுக்கி வைக்க கூட முடியாமல் மாடிப் படிக்கட்டுகளில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பரமக்குடியில் 1954ல் துவங்கி இரண்டாம் நிலை மாவட்ட அரசு நுாலகம் செயல்படுகிறது. இதற்கு நிரந்தர கட்டடம் இல்லாத நிலையில் 2022-ல் ராமநாதபுரம் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அரசு இடம் ஒதுக்கியது.தொடர்ந்து 2024ல் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை கடந்த ஜூன் 10ல் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இது குறித்து பல்வேறு பொதுநல அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தினமலர் நாளிதழ் அடிக்கடி சுட்டிக்காட்டியது.நுாலகம் அமைக்க 6150 சதுர அடி இடம் வழங்கப்பட்ட நிலையில் ரூ.70 லட்சத்தில் 1050 சதுர அடியில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு இரண்டு லட்சம் வரையிலான புத்தகங்கள் இருக்கின்றன.பல ஆண்டுகளாக மூடை கட்டி வைக்கப்பட்ட புத்தகங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் இடவசதி இன்றி மீண்டும் படிக்கட்டுகளில் உறங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கட்டடத்தின் உள்பகுதியில் குறுகிய இடத்தில் ரேக்குகளை அமைத்து புத்தகங்களை வைத்துள்ளனர்.இதனால் தேவைப்படும் புத்தகங்களை வாசகர்கள், மாணவர்கள், அரசு தேர்வு எழுதுபவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய புத்தகங்களும் வைக்க இட வசதி இல்லை.எனவே புதிய கட்டடத்தில் முதல் தளம் அமைக்க வேண்டும். மேலும் மீதமுள்ள இடத்தில் புதிய கட்டட வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை