உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மலட்டாற்றில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் நீர் சேமிக்க வழியில்லை

மலட்டாற்றில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் நீர் சேமிக்க வழியில்லை

கடலாடி: -கடலாடி அருகே மலட்டாற்று படுகையில் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் வெள்ள காலங்களில் உரிய முறையில் தண்ணீரை சேமிக்க வழியின்றி உள்ளது. நீர் மேலாண்மை கேள்விக்குறி ஆகியுள்ளதால் 54 குக்கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுகிறது.மதுரை மாவட்டம் சாப்டூர், எழுமலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கவுண்டநதி, திருமங்கலம் தாலுகா, திருச்சுழி தாலுகா வழியாக குண்டாறு என்னும் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைகிறது. இந்த குண்டாறு கமுதியில் ரெகுநாத காவிரி என்னும் கால்வாய் வழியாக மலட்டாற்று என்னும் பெயரில் கமுதி மற்றும் கடலாடி தாலுகாக்கள் வழியாக பாய்ந்து முடிவில் சாயல்குடி அருகே மூக்கையூர் மன்னார் வளைகுடா கடலில் கலந்து வருகிறது.கமுதி, கடலாடி செல்லக்கூடிய பிரதான ஆற்றுப்பாலத்தின் வழியாக மலட்டாற்று வழித்தட பாதைகள் செல்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் மலட்டாற்று கரையோரங்கள், நீர் வழித்தடங்கள் முழுவதும் எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மலட்டாற்று திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.சாயல்குடி அருகே மலட்டாற்றில் ரூ.3 கோடியில் கடந்த 2019ல் தடுப்பணை அமைக்கப்பட்டது. 3 மீ., உயரத்திலும் 100மீ., நீளத்திலும் தடுப்பணை அமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் குறிப்பிட்ட அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மித மிஞ்சிய நீர் வெளியேற்றப்பட்டு கடலுக்கு செல்கிறது.விவசாயிகள் கூறியதாவது: மலட்டாற்று நீரை நம்பி சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் உள்ளனர். கண்மாய்பாசன பொதுப்பணித்துறையினர் உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து நீர் சேமிப்பிற்கு இடையூறாக இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் சரி செய்ய வேண்டும். மலட்டாற்றில் சட்டவிரோதமாக கனிம வள கொள்ளை தொடர்கிறது. இவற்றினை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். எனவே தமிழக அரசு உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்து வரக்கூடிய மழை காலத்திற்கு முன்பாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ