உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவர் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான தேசத்தலைவர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

தேவர் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான தேசத்தலைவர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

கமுதி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அனைத்து சமுதாயத்திற்கும் ஒரு பொதுவான தேசத்தலைவர் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா, 63வது குருபூஜை விழாவையொட்டி நேற்று தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தேவர் வாழ்ந்த வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். தேவர் இல்ல நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதன் பின் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தேவர் ஒரு சித்தர். வாய்மை, சத்தியம் தனது கடமை என வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். ஒரு சமுதாயத்திற்கு மட்டும் அவர் சொந்தம் இல்லை. பெருவாரியான சமுதாய மக்களுக்கு தலைமை ஏற்றவர். பேரையூர் வேலுச்சாமி நாடார் இல்லத்தில் அடிக்கடி உணவருந்துவார். மாற்று இனத்தை சேர்ந்த பெருமாள் என்பவரை எம்.எல்.ஏ., ஆக்கியவர். தனது சொத்துகள் அனைத்தையும் அனைவருக்கும் தந்தவர்.தேச பக்தர் நேதாஜியின் ஐ.என்.ஏ.,படையின் தளபதியாக இருந்தவர். நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என தேவர் தனது வாழ் நாள் கடைசி வரையும் கூறிய வர். 24 ஆண்டுகளாக தேவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தற்போது துணை ஜனாதிபதி ஆன பின் தமிழகத்திற்கு முதல் முறையாக வரும் போது அவருக்கு அஞ்சலி செலுத்துவதை பெருமையாக நினைக்கிறேன். பூமி உள்ளவரை அவர் புகழ் நீடிக்கும். வருங்காலத்தில் தேசியத் தலைவர்களை ஒரு சமுதாயத்திற்குள் அடைக்காமல் எல்லா சமுதாயத்தினரும் ஜாதியை மறந்து போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி