குடியிருப்பு வசதியில்லாததால் திருவாடானை போலீசார் அவதி
திருவாடானை : திருவாடானையில் போலீஸ் குடியிருப்பு இல்லாததால் வெளி மாவட்டத்தை சேர்ந்த போலீசார் சிரமம் அடைந்துள்ளனர்.திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு இருந்தது. ஓடுகளால் கட்டப்பட்ட அக்கட்டடங்கள் சேதமடைந்தது. அக்கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.தற்போது அந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.,க்கு மட்டும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் போலீசாருக்கு குடியிருப்பு வசதியில்லை.திருவாடானை போலீஸ்டேஷனில் பணிபுரியும் வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசார் தங்க இடமின்றி அவதியடைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக போலீசார் நியமிக்கபட்ட நிலையில் திருவாடானையில் தற்போது 38 போலீசார் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு வசதியில்லாததால் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே போலீசாருக்கு குடியிருப்பு கட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.