திருவெற்றியூரில் ஓராண்டாக திறக்கப்படாத கழிப்பறை
திருவாடானை : திருவெற்றியூரில் கட்டப்பட்ட கழிப்பறை ஓராண்டாகியும் திறக்கப்படாமல் இருப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இக் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் முதல் நாள் தங்கியிருந்து மறுநாள் கோயில் முன்புள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கூடி அங்குள்ள மண்டபங்களில் தங்குவார்கள். இது தவிர செவ்வாய், வெள்ளி வார நாட்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளி உள்ளிட்ட திருவிழா நாட்களில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். இந்நிலையில் கழிப்பறை வசதியில்லாமல் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர். கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கழிப்பறை வசதியில்லாததால் கண்மாய் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை. பக்தர்களின் நலன் கருதி கழிப்பறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.