உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விடுதி பெயரில் பண மோசடி சுற்றுலா பயணிகள் உஷார்

விடுதி பெயரில் பண மோசடி சுற்றுலா பயணிகள் உஷார்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகள் பெயரில் சமூக வலைதளத்தில் போலியாக பதிவிட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கறந்து மோசடி செய்கின்றனர்.ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி, பாம்பன் பாலம், குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு ரசிக்க இங்குள்ள விடுதியில் தங்குகின்றனர். நவ., முதல் ஜன., வரை வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் 20 நாட்கள் வரை தங்கி ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவு நடத்துவர்.இதனால் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதிகளில் கூட்டம் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி சமூக வலைதள மோசடி கும்பல் சில தங்கும் விடுதிகளின் முகப்பு தோற்றம், வரவேற்பு அறையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அறைகள் காலியாக உள்ளது என போலி விளம்பரம் செய்கின்றனர்.இதனை பார்க்கும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப் பயணிகள் அதில் குறிப்பிட்டுள்ள போலி அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கும் அறைக்கு முன்பணத்தை செலுத்துகின்றனர்.பின் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்றால் முன்பணம் எங்களுக்கு வரவில்லை என விடுதி நிர்வாகம் கூறுவதால் அதிர்ச்சி அடைகின்றனர்.மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனை அடைகின்றனர். இக்கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ