பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலத்தில் முறைகேடு ரத்து செய்வதற்கு வியாபாரிகள் வலியுறுத்தல் அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் புகார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலத்தில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் டி.டி., வாங்கிக் கொண்டு ஒரு கடைக்கு இருவர் என சிண்டிகேட் அமைத்து முறைகேடு நடந்துள்ளதால் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள், அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு 99 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக.,ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் 14 கடைகளை தவிர்த்து 85 கடைகளை ஜூலை 17ல் பொது ஏலமிட ஜூன் 30 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்க கடந்த 3 நாட்களாக ஏராளமான வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களிடம் டி.டி., வாங்க ஆளின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று (ஜூலை 17 ) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கமிஷனர் அஜிதா பர்வின், மேலாளர்(பொ) சேகர், பொறியாளர் பாண்டிஸ்வரி மூலம் கடைகள் பொது ஏலமிடப்பட்டது. அப்போது பெரும்பாலான கடைகளுக்கான பொது ஏலத்தில் தலா இருவர் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏலம் கேட்க போதுமான ஆட்களின்றி நகராட்சிக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏல நடவடிக்கையை புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என அலுவலர்கள் கூறினர். இதற்கு நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சில நிமிடங்கள் மட்டும் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதித்தனர். வெளியே டி.டி.,யுடன் ஏராளமான வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளை சந்திக்க முயன்றனர்.அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கடைகள் ஏலத்தில் முறைகேடு நடக்கிறது. அதனை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கூச்சலிட்டனர். வியாபாரிகள் முனுசாமி, சீனிபீர் ஆகியோர் கூறுகையில், கடை ஏலத்தில் பங்கேற்க கடந்த 3 நாட்களாக டி.டி.,யுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தோம்.கமிஷனர், மேலாளர் இருப்பது இல்லை. பதிவுத்தபாலில் அனுப்பியும் பதில் வரவில்லை. டோக்கன் வாங்க அலைந்தேன், திட்டமிட்டு நகராட்சி அலுவலகத்தில் டோக்கன் வழங்காமல் தனியார் ஓட்டலில் வழங்கினர். பொது வியாபாரிகள் பங்கேற்க முடியவில்லை. கலெக்டரிடம் புகார் அளித்தும் பலனில்லை. கட்சிக்காரர்கள் மட்டும் பங்கேற்ற இந்த முறைகேடான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். அ.தி.மு.க., புகார்
அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலாளர் பால்பாண்டியன் பெயரில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், வெளிநபர்களிடம் டி.டி., வாங்காமல் அவர்களுக்கு வேண்டிய நபர்களிடம் டி.டி., வாங்கி ஏலம் விட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஏலத்தை ரத்து செய்து இடெண்டர் மூலம் ஒப்பந்த ஏலம் விட வேண்டும் என வலியுறுத்தினர்.