இன்று புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் கடைசி நாளிலும் டி.டி., வாங்க ஆளில்லை காத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் இன்று (ஜூலை 17ல்)ஏலம் விடப்பட உள்ள நிலையில் அதற்கு விண்ணப்பிக்க வருபவர்களிடம் கடைசி நாளான நேற்றும் டி.டி., வாங்க ஆள் இல்லாததால் காலை முதல் மதியம் வரை காத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு 99 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 14 கடைகளை தவிர்த்து 85 கடைகளுக்கு இன்று (ஜூலை 17ல் ) பொது ஏலம் நடக்கிறது. இதற்காக ஜூன் 30ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் கடைக்கான ஏலத்தில் பங்கேற்க டி.டி.,யுடன் வரும் விண்ணப்பதாரர்களை நகராட்சி நிர்வாகம் அலைகழித்து வருகிறது. இந்நிலையில் டி.டி., வழங்க கடைசி நாளான நேற்று மதியம் 3:00 மணி வரை ஏராளமான வியாபாரிகள் காத்துஇருந்தனர். ஆனால் அதனை வாங்க நகராட்சியில் ஆளில்லை. ஏலத்தில் பங்கேற்க டி.டி.,யுடன் விண்ணப்பிக்க 3 நாட்களாக வருகிறோம். ஆனால் கமிஷனர்,மேலாளர் இருப்பது இல்லை. அவர்கள் வெளியே சென்றுள்ளதாக கூறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக மாற்று நபர்களையும் நியமிக்கவில்லை.அலுவலகத்தில் (நேற்றும்) ஆளின்றி வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கமிஷனர், மேலாளர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.