உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை முதல் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு துவக்கம்

நாளை முதல் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு துவக்கம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் நாளை(ஜன.17) முதல் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நடக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பாம்பன் ரயில் பாலம் பலமிழந்ததால் 2020ல் ரூ.530 கோடியில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதற்கிடையில் 2022 நவ.23ல் பழைய ரயில் பாலத்தின் துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு துாணில் விரிசல் ஏற்பட்டதால் அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.இதனால் திருப்பதி, கன்னியாகுமரி, சென்னை மற்றும் வாரணாசி, ஓகா, புவனேஸ்வர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்டன.இதில் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முன்பு ராமேஸ்வரத்தில் சுத்தம் செய்து பராமரித்தனர். பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மதுரை கொண்டு சென்று பராமரித்தனர்.புதிய ரயில் பாலம் பணி 100 சதவீதம் முடிந்ததால் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம் - திருப்பதி (16780/16779), ராமேஸ்வரம் - குமரி (22621/22622) ரயில்களின் பராமரிப்பு பணிகள் ஜன.,17 முதல் மதுரைக்கு பதிலாக ராமேஸ்வரம் பணிமனையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்கள் தான் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மண்டபம் - மதுரை முன்பதிவில்லா ரயில்களாக (06780) இயக்கப்பட்டன. பராமரிப்பு பணிகள் ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் நாளை முதல் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதன் முதலாக பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு பராமரிப்புக்காக ரயில் பெட்டிகள் வர உள்ளன. இதனால் விரைவில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழா நடக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ