இடையூறு இல்லாத ரோட்டோர மரங்களை வெட்டி...காயப்படுத்துறாங்க: தடுத்து பாதுகாக்க பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி, ராமேஸ்வரம், தேவிபட்டினம், நயினார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைகள், புறநகர், கிராமச்சாலைகளில் நிழல்தரும் மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக அகற்றுகின்றனர். ஆனால் அதற்கு இணையாக மரக்கன்றுகள் நடுவது இல்லை. இந்நிலையில் தற்போது பேரிடர் மழைக்கால முன்னெச்சரிக்கை என்ற பெயரில் மின் கம்பிகளை உரசும் மரங்களை மின்வாரியத்தினர், சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டுகின்றனர். அப்போது சில இடங்களில்எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நன்கு வளர்ந்துள்ள மரத்தின் பெரிய கிளைகளையும் அடிப்பகுதியோடு வெட்டி சாய்க்கின்றனர். இதனால் மரத்தின் முழு வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த பசுமை ஆர்வலர் சுபாஷ் சேதுபதி கூறுகையில், ஒவ்வொரு மரங்களும் நன்கு வளர்ந்து பலன்தர பல ஆண்டுகளாகிறது. அவற்றை பாதுகாக்க யாரும் முன்வருவது இல்லை. மாறாக அவற்றில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை கட்டி வைக்கின்றனர். தற்போது மின்வாரியத்தினர் மின்கம்பிகள் இல்லாத இடங்களில் கூட மரக்கிளையை அடிப்பகுதியுடன் வெட்டியுள்ளனர். இதனால் மரங்கள் பட்டுப்போக வாய்ப்பு உள்ளது. எனவே மரத்தை வெட்டி காயப்படுத்தும் இச்செயலை தடுத்து சாலையோர மரங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.