சுனாமி வீட்டிற்கு ரூ.67,000 மின் கட்டணம்; உரிமையாளர் தவிப்பு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் உள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு ரூ.67ஆயிரம் மின் கட்டணம் பில் செலுத்தக் கூறுவதால் உரிமையாளர் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார்.மண்டபம் அருகே வேதாளை சுனாமி குடிருப்பில் வசிப்பவர் ேஷக் ஜமாலுதீன். இவர் இரு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.500 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறார். மே மாதம் ரூ.67ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதால் இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ேஷக் ஜமாலுதீன் கூறுகையில், நான் கடலில் பாசிஎடுக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். 3 மாதம் மீன்பிடிப்பு, பிற நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறேன். எனது வீட்டிற்கு மின் கட்டணம் பில் ரூ.67 வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்த பிறகு பரமக்குடியில் மின் மீட்டரை ஆய்வு செய்தனர். அதில் எனக்கு ரூ.530 மின் கட்டணம் செலுத்தக் கோரி அலைபேசியில் எஸ்.எம்.எஸ்., வந்தது. அதனை செலுத்தி விட்டேன். இருந்தாலும் ரூ.67ஆயிரம் கட்ட வேண்டும் என்கின்றனர். இல்லை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவதாக மின்வாரிய அலுவலர்கள் மிரட்டுகின்றனர். உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறார். இதுகுறித்து மண்டபம் கேம்ப் மின்வாரிய உதவிப்பொறியாளர் நடராஜன் கூறுகையில், இடமாறுதலில் 10 நாட்களுக்கு முன்புதான் மண்டபம் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். ரூ.67ஆயிரம் மின் கட்டணம் தொடர்பாக அவரது மின்மீட்டரை ஆய்வு செய்துள்ளோம். அதில் எந்த குறையும் இல்லை. வீட்டிற்குள் மின்வினியோகத்தில் பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் அவரை மிரட்டவில்லை. அவர்தான் அலுவலகத்திற்கு வந்து கூச்சலிட்டார். உண்மையான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க புகார்தாரர் ஒத்துழைக்க மறுக்கிறார். இது தொடர்பாக எனது மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்களது உத்தரப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.