கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை இந்திய கடலோர காவல்படை வீரர்கள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத்துறை புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று (நவ.,22) இரவு பாம்பன் கடலில் ரூட் கப்பலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு நாட்டுப்படகை பிடித்து சோதனையிட்டதில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள 77 கிலோ கஞ்சா இருந்தது. இதனை பறிமுதல் செய்து படகில் இருந்த கடத்தல்காரர்கள் தங்கச்சிமடத்தை சேர்ந்த எரோனியஸ் 33, குணசேகரன் 42, ஆகியோரை கைது செய்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.