குளத்தில் குளித்த போது இரு மாணவியர் பலி
திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினத்தில், சித்திரவேல் மகள் வைத்தீஸ்வரி, 10, பாலமுருகன் மகள் பிரீத்தி, 11, நாயகம் மகள் நர்மதா, 10. மூவரும் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தனர். நேற்று மூவரும் பள்ளிக்கு செல்லாமல், மதியம் 1:00 மணிக்கு அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், மூவரும் நீரில் மூழ்கினர். குளத்தை சுற்றிலும் வீடுகள் இருந்ததால், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளத்தில் இறங்கி, சிறுமியரை மீட்டனர். இதில் வைத்தீஸ்வரி, பிரீத்தி இறந்தனர். நர்மதா லேசான காயத்துடன் தப்பினார்.அவர் எஸ்.பி.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தொண்டி போலீசார் விசாரித்தனர். சிறுமியரின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டி.எஸ்.பி., சீனிவாசன் பேச்சில் ஈடுபட்டார். மாணவியர் என்பதால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி., கூறினார். அதை தொடர்ந்து மாணவியரின் உடல்கள் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன. இறந்த இரு மாணவியரும் நெருங்கிய உறவினர்கள்.