இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் சுக்கு பறிமுதல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா, சுக்கு, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டுப் படகுகளில் சமீபகாலமாக அதிகளவில் கடத்தப்படுகிறது.இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று அதிகாலை திருப்புல்லாணி அடுத்த தோப்புவலசை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலமாக சுக்கு கடத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்தது.சேதுக்கரையிலிருந்து தோப்புவலசை வரை கடற்கரை ஓரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புவலசை கடற்கரையில் 50 சாக்கு மூடைகளில் 2 டன் சுக்கை நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைத்திருந்தனர்.இதையடுத்து சுக்கு மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து பின்னர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மூடைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.