ஆவணங்கள் இல்லாத டூவீலர்கள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு
திருவாடானை: ஆவணங்கள் இல்லாத டூவீலர்களை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. விபத்து, மது அருந்தி டூவீலர் ஓட்டியது மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட டூவீலர்கள் கைப்பற்றபட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர போலீசார் ரோந்து செல்லும் போது சாலை ஓரங்களில் பல நாட்களாக நிறுத்தியுள்ள டூவீலர்களையும் கைப்பற்றியுள்ளனர். வழக்குகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை எடுத்துச் செல்லாமல் இருந்தனர். வாகன உரிமையாளர்கள் ஆதார் அட்டை, வாகன உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லலாம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள வாகனங்கள் ஒப்படைக்கப்பட மாட்டது. குறிப்பாக டூவீலர் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி எடுத்துச் செல்லலாம் என சில நாட்களுக்கு முன்பு போலீசார் அறிவித்தனர். அதன்படி 200க்கும் மேற்பட்ட டூவீலர் வாகன உரிமையாளர்கள் தக்க ஆவணங்களை காட்டி எடுத்துச் சென்றனர். மீதமுள்ள டூவீலர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிகள் நடக்கிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், எந்தவித ஆவணங்களும் இல்லாத வாகனங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யபட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு கலெக்டர் உத்தரவின் பேரில் டூவீலர்கள் ஏலம் விடப்படும் என்றனர்.