தேசிய நெடுஞ்சாலைகளில் எரியாத மின் விளக்குகள்
திருவாடானை : திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான போக்குவரத்து உள்ளது. கார்கள் குறைந்தபட்சம் மணிக்கு 100 முதல் 120 கி. மீ., வேகத்தில் செல்வதால் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. குறிப்பாக கிராமங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சாலையில் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. திருவாடானையிலிருந்து தேவகோட்டை வழியாக செல்லும் ரோட்டில் சின்னக்கீரமங் கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருளாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் எரியாத விளக்குகளை எரிய வைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.