மூடப்படாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
முதுகுளத்துார்:முதுகுளத்துார், கமுதி பகுதியில் எம். சாண்ட், சவடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் சில தார்ப்பாய் போட்டு மூடப்படாமல் செல்வதால் துாசி பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை, கமுதி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்.சாண்ட், சவடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்காகவும், ரோடு பணிகளுக்காகவும் செல்கிறது.இந்நிலையில் சிலர் மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் வருகின்றனர். லாரியின் மட்டத்திற்கு மேல் உயரமாக மண் ஏற்றி வரப்படுகிறது. இதனால் காற்று வீசும் போது லாரியில் இருந்து துாசி பின்னால் வரும் வாகனங்கள் மீதும் ரோட்டிலும் சிதறி விழுகின்றன.இதனால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் போலீசார் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வலியுறுத்த வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.