உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாகனேந்தல் குடிநீர் ஊருணி சீரமைப்பதற்கு வலியுறுத்தல்

நாகனேந்தல் குடிநீர் ஊருணி சீரமைப்பதற்கு வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: குடிநீர் தட்டுப்பாட்டால் உப்பூர் அருகே நாகனேந்தல் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பகுதியில் உள்ள குடிநீர் ஊருணியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் காவனுார் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமமான நாகனேந்தலில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஊருணியில் மழை நீரை தேக்கி குடிநீராக பல ஆண்டுகளாக பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் ஊருணி முறையாக பராமரிப்பு செய்யப் படாததால் ஊருணியில் அதிகளவில் உவர் மண் தேங்கி உள்ளதால் மழை நீரை ஊருணியில் தேக்கினாலும் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் சப்ளை செய்யப்படாததால் கிராமத்தினர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு டிராக்டர் டேங்கர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 வரை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீர் ஊருணியில் தேங்கியுள்ள உவர் மண்ணை அகற்றி குடிநீர் ஊருணியை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து கிராமத் தலைவர் நாகநாதன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீரும் அப்பகுதி மக்களுக்கு முழுமையாக சப்ளை செய்யப்படாத நிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நீரை தேக்கி குடிநீராக பயன்படுத்தி வந்த ஊருணி உவர் மண்ணால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் ஊருணியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை