தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டும் வாகனங்கள் ஒருபுறம் லாரி, மறுபுறம் மினி பஸ்சால் திணறல்
பரமக்குடி: பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் ஒருபுறம் சரக்கு லாரி, மறுபுறம் மினி பஸ்களை நிறுத்தி வைப்பதால் வாகன நெரிசல் தொடர்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் பிரதான வணிக நகராக உள்ள பரமக்குடியில் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் என ஏராளமாக இயங்குகிறது. இதனால் தினந்தோறும் பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்லும் நிலையில் பணிக்கு வந்து செல்வோர் எண்ணிக்கையும் பல ஆயிரமாக உயர்ந்துள்ளது.மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்ல நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்ட நிலையில் நகருக்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் நிலை இருக்கிறது. இதனால் நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முக்கியமாக ஐந்து முனை ரோடு துவங்கி தீயணைப்பு நிலையம் வரை இருபுறமும் அனைத்து வாகனங்களையும் வரிசை கட்டி நிறுத்துகின்றனர். தொடர்ந்து எதிர் எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை இருக்கிறது.இச்சூழலில் ஆங்காங்கே நேரக் கட்டுப்பாடின்றி சரக்குகளை இறக்குவதும், மினி பஸ் ஸ்டாப் என இல்லாமல் ஆங்காங்கே நிறுத்துவதால் நெரிசல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் விபத்து அச்சத்தில் ஒவ்வொரு முறையும் ரோட்டை கடக்கும் நிலை உள்ளது. போக்குவரத்து போலீசார் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த சப்-கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.