கடைகளுக்கு எச்சரிக்கை
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 853 எக்டேரில் நெல், சிறுதானியங்கள் 5200 எக்டேர், பயறு வகைப் பயிர்கள் 3300 எக்டேர், பருத்தி 980 எக்டேர், தோட்டக்கலைப் பயிர்கள் 11 ஆயிரத்து 973 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சம்பா பருவத்தில் இதுவரை 491.26 மி.மீ மழை பெய்துள்ளது.விவசாயிகள் மேலுரம் இடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் யூரியா 3878 டன், டி.ஏ.பி., 646 டன், பொட்டாஷ் 198 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1445 டன், சூப்பர் பாஸ்பேட் 109 டன் என 6277 டன் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.நடப்பு மாதத்திற்கு தேவைப்படும் 1073 டன் யூரியா உர மூடைகள் சென்னையில் இருந்து வந்தன. அவற்றைதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 283.25 டன்னும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 798.75 டன்னும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உரங்களை அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். மீறி கூடுதல் விலைக்கு விற்றால்உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 பிரிவு 3ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.