அரசு நிதி வீணடிப்பு: கிராமங்களில் செயல்படாத ஆர்.ஓ.,பிளான்ட் : குடிநீரை குடம் ரூ.13க்கு வாங்கி மக்கள் அவதி
கடலாடி: மாவட்டத்தில் கடலாடி, திருப்புல்லாணி ஒன்றிய ஊராட்சிகளில் பல கிராமங்களில் உவர்நீரை சுத்திகரிக்க கூடிய ஆர்.ஓ.,பிளான்ட் அமைக்கப்பட்டு அவை செயல்படாமல் உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ரூ. 10 முதல் ரூ.13 வரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.கடந்த 2018 முதல் 2022 வரை அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட்கள் பெரும்பாலானவை பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலமாக தண்ணீர் சேகரிக்கப்பட்டு அவற்றை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கி அவற்றின் மூலமாக ஊராட்சியில் வருமானம் கிடைப்பதற்கு வழிவகை செய்வது இத்திட்டத்தின் நோக்கம்.இத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு ஆர்.ஓ., பிளான்டுகளை பராமரிக்கவும், ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கவும் அரசின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட திட்டம் பெருவாரியான ஊராட்சிகளில் பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தனியார் நிறுவனங்களின் மூலம் பொருத்தப்பட்ட ஆர்.ஓ., பிளான்டுகள் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ரூ. 10 முதல் ரூ.12 வரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.இத்திட்டம் ஊராட்சியில் நடைமுறைக்கு வந்தால் குடம் தண்ணீர் ரூ.5 க்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் தண்ணீர் பிடிக்கும் குடத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊராட்சிகளில் வருவாயை பெருக்க இயலும். இந்நிலையில் தலா ரூ. 15 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட்கள் தற்போது வரை பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பயன்பாடில்லாமல் உள்ள ஆர்.ஓ., பிளான்டுகளை ஆய்வு செய்து அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றனர்.--