கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பணி மும்முரம்: ரூ.30.48 கோடியில் வைகையை காக்கும் திட்டம்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.30.48 கோடியில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வைகையில் கலக்கிறது. இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில் ஜன.,ல் வைகையின் இரு கரைகளிலும் ரூ.10.43 கோடியில் கழிவு நீர் கடக்க பைப் லைன் அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.இதேபோல் தண்டராதேவி பட்டணத்தில் உள்ள நகராட்சி புல் பண்ணையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. இதன்படி கழிவு நீரை சுத்திகரிக்க ரூ.20.05 கோடியில் பணிகள் நடக்கிறது.இப்பணிகள் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் துவக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 12.5 டன் அளவில் கழிவுநீர் சுத்திகரிக்கும் வகையில் கிணறு தோண்டப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.இப்பணிகளை நகராட்சி கமிஷனர் முத்துச்சாமி, உதவி இன்ஜினியர் சுரேஷ் பார்வையிட்டனர். பணிகள் முடியும் நிலையில் வைகை ஆற்றில் ஒட்டுமொத்தமாக கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு ஆற்றின் புனிதம் காக்கப்படும்.